கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி


கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி
x
தினத்தந்தி 26 Sept 2023 6:15 AM IST (Updated: 26 Sept 2023 6:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலத்துக்கு செல்லும் பாதையை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அப்போது மனு கொடுப்பதற்காக சக்கர நாற்காலியில் கலெக்டர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பையில் கேனில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அவரை போலீசார் தடுத்து விசாரித்தனர். அதில் அவர் நிலக்கோட்டை தாலுகா கே.ராஜதானிக்கோட்டையை சேர்ந்த துரைப்பாண்டி என்பதும், அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீசார் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்க வைத்தனர்.

மற்றொரு குடும்பம்

இதேபோல் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நிலக்கோட்டை தாலுகா ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்த சுப்பையா, அவருடைய மனைவி மற்றும் 2 மகள்கள் என்பதும், சுப்பையா மற்றும் குடும்பத்தினர் வசித்த வீடு, சொத்துகளை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தனர்.

மாற்றுத்திறனாளி தர்ணா

கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு, வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தார். அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜபாண்டி, பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாப்பாத்தி ஆகியோர் உள்பட பலர் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.


Next Story