45 புனித தீர்த்தங்களுடன் அலங்கார ஊர்வலம்


45 புனித தீர்த்தங்களுடன் அலங்கார ஊர்வலம்
x

45 புனித தீர்த்தங்களுடன் அலங்கார ஊர்வலம்

தஞ்சாவூர்

மருவத்துவக்குடி காசிவிஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதனை முன்னிட்டு 45 புனித தீர்த்தங்களுடன் அலங்கார ஊர்வலம் நடந்தது. இதில் 2 ஆயிரம் பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

குடமுழுக்கு

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மருத்துவக்குடியில் 84 ஆண்டுகளுக்கு பிறகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து திரளான பெண்கள் குடங்களில் காவிரி தீர்த்தம் எடுத்து வர, அலங்கார ரதத்தில் 45 புனித தீர்த்தங்களின் கடம் மற்றும் சுவாமி, அம்பாள் மூர்த்தங்களுடன் புறப்பாடு நடந்தது.

அலங்கார யானை, குதிரைகள், ரிஷபம் ஆகியவை அணிவகுக்க செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க நடந்த ஊர்வலத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் குடத்தில் புனித தீர்த்தங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோவிலை வந்தடைந்தனர்.

புண்ணிய தீர்த்தங்களுக்கு வரவேற்பு

ஊர்வலத்தில் சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தஞ்சை ராமகிருஷ்ண மட தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை வேலப்ப தம்பிரான் சுவாமிகள், பேரூர் ஆதீனம் சோழமண்டலம் சிவப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பக்தர்களுடன் நடந்து வந்தனர்.

பின்னர் மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோவிலை வலம் வந்தனர். அப்போது புண்ணிய தீர்த்தங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் மூலவர் விமானங்களின் கலசம் பிரதிஷ்டை சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், பட்டிமன்ற நடுவர் அழகு பன்னீர்செல்வம் மற்றும் நாட்டாண்மைகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story