பகல் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் ரெயில்வே சுரங்கப்பாதை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை பகல் நேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை பகல் நேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ரெயில்வே சுரங்கபாதை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டு உள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் வழியாக வேளாண்மைத்துறை அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, காவலர் குடியிருப்பு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்களும், அரசு அலுவலர்களும் சென்று வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து வேங்கிக்கால் வழியாக கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்பவர்கள் கலெக்டர் அலுவலகத்தை தாண்டி தீபம் நகர் வரை சென்று புறவழிச்சாலை வழியாக மருத்துவமனைக்கு சென்று வந்தனர்.
இந்த சுரங்கப்பாதை அமைத்த பிறகு தீபம் நகர் வரை சென்று வராமல் போக்குவரத்து இடையூறின்றி எளிமையாக இதன் வழியாக மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
பகலிலும் இருள் சூழ்ந்து...
இந்த சுரங்கப்பாதையில் போதிய மின்விளக்கு வசதியின்றி பகல் நேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்பவர்கள் பகலிலும் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு செல்கின்றனர்.
மேலும் இந்த சுரங்கப்பாதையின் உள்பகுதி வளைந்து செல்லும் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளதால் எதிர், எதிர் திசையில் என்ன வாகனங்கள் வருகின்றன என்று தெரியாமலும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
எனவே சுரங்கப்பாதையின் வளைவு பகுதியில் எதிர், எதிர் திசையில் வரும் வாகனங்களை வாகன ஓட்டிகள் கண்டறியும் வகையில் ஒளிஎதிரொலிப்பான் (கண்ணாடி) அமைக்க வேண்டும் என்றும், பகல் நேரத்திலும் சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த சுரங்கப்பாதையின் வழியாக மருத்துவமனைக்கு செல்லும் பாதை பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படும். இவ்வழியாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களும், மருத்துவமனைக்கு செல்லும் பெண்களும் இரவு நேரத்தில் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுரங்கப்பாதையின் வழியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.