ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தின் நுழைவு பகுதியில் ஆபத்தான பள்ளம்
பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.துறைமுகம்
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 70 கோடி நிதியில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த துறைமுகம் கட்டும் பணிகள் முழுமையாக முடிவடைந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்த வசதியாக துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.
மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் மீனவர்கள் படகிலிருந்து மீன்களை வாகனத்தில் ஏற்றி அந்த வாகனம் துறைமுக பகுதியில் உள்ள தளம் மற்றும் சாலை வழியாக வெளியே கொண்டு செல்ல வசதியாக துறைமுக தளத்தில் பாலம் அமைத்து சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளங்கள்
இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தின் நுழைவு பகுதியில் ஒரு சில இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் விழுந்தும், சேதமடைந்த நிலையிலும் காட்சியளித்து வருகிறது. அந்த இடத்தில் கற்களை போட்டு பள்ளங்களை தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட மீன் துறை அதிகாரிகள் அதை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, பாம்பன் குந்துகால் பகுதியில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தின் நுழைவு பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.