ஆபத்தான வளைவில் சேதமடைந்த தரைப்பாலம்
கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான வளைவில் சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான வளைவில் சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைப்பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, காடுவெட்டி என்ற இடத்தில், அப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு செல்வதற்காக, சாலையின் குறுக்கே நாகங்குடி பாசன வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டு, சாலையின் மேல் பகுதியில் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாக தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்த நிலையில், ஒரு பக்கம் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதனால், அந்த இடத்தில் மிகப் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஆபத்தான வளைவு
அந்த பள்ளம் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டாலும், அந்த இடம் ஆபத்தான வளைவு பகுதி என்பதாலும், அந்த இடத்தை கடந்து சென்று வருவதில் அச்சம் அடைந்து வருவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
இந்த சாலை வழியாக திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
புதிதாக கட்டித்தர வேண்டும்
தரைப்பாலம் தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளதால் இரவில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வாய்க்காலுக்குள் விழுந்து காயம் அடையும் அபாய நிலை உள்ளது.
எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான வளைவில் உள்ள சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு,புதிதாக கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.