அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சித்ரா பவுர்ணமி

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கடந்த 4-ந்தேதி நள்ளிரவு 11.58 மணி அளவில் தொடங்கி நேற்று முன்தினம் நள்ளிரவு 11.33 மணி அளவில் நிறைவடைந்தது.

இதையொட்டி கடந்த 4-ந்தேதி இரவு முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று முன்தினம் பகல் முழுவதும் பவுர்ணமி நீடித்ததால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நேற்று அதிகாலை வரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சித்ரா பவுர்ணமியையொட்டி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது.

கோவிலில் பக்தர்கள் கூட்டம்

நேற்று காலை 7 மணிக்கு மேல் சிலர் தனித்தனியாக கிரிவலம் சென்றனர். சித்ரா பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கட்டணம் மற்றும் பொது தரிசனம் வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பொது தரிசனம் வழியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக தெரிவித்தனர். வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கிரிவலம் சென்ற பக்தர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் திரும்பி சென்றனர். மேலும் இரவில் கிரிவலம் சென்ற பக்தர்கள் ரெயில் நிலையத்தில் காத்திருந்து நேற்று காலையில் திருப்பதி மற்றும் விழுப்புரம் சென்ற ரெயிலில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.

தூய்மை பணி

மேலும் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதை முழுவதும் நேற்று ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.


Next Story