அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2-வது நாளாக ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலை சுற்றும் பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் தொடங்கி நேற்று இரவு 7.14 மணி அளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கிரிவலப்பாதையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட வரிசையில் பக்தர்கள்

தொடர்ந்து 2-ம் நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் வெயில் சுட்டெரித்தது. அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதுமட்டுமின்றி கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோடை வெயில் தொடங்கிய காரணத்தினால் கோவிலில் வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story