அய்யலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு
அய்யலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
அய்யலூர் அருகே உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி அம்பலம் (வயது 45). விவசாயி. இவர், தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கொட்டகை அமைத்து 3 பசுக்களை வளர்த்து வருகிறார். நேற்று அவரது பசுக்கள் வழக்கம்போல் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு பசுமாடு, தோட்டத்தில் இருந்த கிணற்றின் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பசு கிணற்றுக்குள் தவறி விழுந்தது. சுமார் 50 அடி ஆழ கிணற்றில், 12 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் பசுமாடு கத்தியபடி நீரில் தத்தளித்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த ஆண்டி அம்பலம், உடனடியாக இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.