திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 53). இவர் நேற்று பகல் தனது மனைவி பாத்திமாவுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். இந்த தம்பதி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் தங்களது உடலில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றனர். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்று அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.
இதுகுறித்து சாகுல்அமீது போலீசாரிடம் கூறுகையில், நான் சரக்கு லாரி ஓட்டி வருகிறேன். தனியார் நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக லாரி புத்தகத்தை அவர்களிடம் கொடுத்து இருந்தேன். கடந்த சில மாதங்களாக கடன்தொகை செலுத்த முடியவில்லை. இதனால் லாரியை பறிமுதல் செய்து கொண்டதோடு, லாரி புத்தகமும் தொலைந்துவிட்டதாக கூறுகிறார்கள். இது குறித்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் தற்கொலை செய்து கொள்ள வந்ததாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.