13 வயது மகனை காப்பாற்ற போராடும் தம்பதி


13 வயது மகனை காப்பாற்ற போராடும் தம்பதி
x

13 வயது மகனை காப்பாற்ற தம்பதி போராடி வருகின்றனர்.

திருச்சி

மணப்பாறை:

13 வயது சிறுவன்

மணப்பாறையில் உள்ள பூ மார்க்கெட் சந்து பகுதியில் வசிப்பவர் பரக்கத்துல்லா. இவரது மனைவி ஹிதாயத்து நிஷா. இந்த தம்பதியின் ஒரே மகன் முகம்மது உசேன்(வயது 13). மூளை வளர்ச்சி குன்றிய இந்த சிறுவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 3 வயதில் அந்த சிறுவனுக்கு இரைப்பை தொடர்பான ஒரு அறுவை சிகிச்சை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தண்ணீர், உணவு என எதுவாக இருந்தாலும் வயிற்றுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய் மூலம்தான் கொடுக்க முடியும். இருப்பினும் இந்த தம்பதியினர், தங்களது மகனை காப்பாற்றும் நோக்கில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கிடைக்க செய்து வருகின்றனர்.

போராடும் தம்பதி

இதில் 3 மாதங்களுக்கு ஒருமுறை சிறுவனை வேலூர் அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுவனை பரிசோதனை செய்ய வேண்டும். தினமும் 3 ஊசிகள் சிறுவனுக்கு செலுத்தப்பட வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள குழாய் மூலம் உணவு வழங்க வேண்டும்.

இதுமட்டுமின்றி வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள குழாயை 40 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், சுமார் ரூ.8 ஆயிரத்திற்கு மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டும். இதன்படி தற்போது சிறுவனை பராமரிக்க ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அந்த தம்பதியினர் செலவு செய்து வருகின்றனர்.

உதவிட கோரிக்கை

திருச்சியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பரக்கத்துல்லா ஊழியராக வேலை பார்த்து வருகிறார். எல்லாவற்றையும் விற்றுவிட்டு தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு சென்று விட்டார். தாங்கள் வாழும் காலம் வரை மகனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் இந்த தம்பதியினர், சிறுவனுக்கு மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட சிகிச்சைக்கு அரசு உதவினால், தாங்கள் வாழும் காலம் வரை சிறுவனை வைத்து பராமரித்து கொள்வோம். மேலும் வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு சென்று விட்ட நிலையில், அரசின் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்கி உதவிட வேண்டும் என்று பரக்கத்துல்லா, ஹிதாயத்து நிஷா தம்பதியினர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த சிறுவனால் வாய் பேச முடியாது. தனக்கு பசித்து விட்டால் சத்தம் கொடுக்கிறார். அதன் மூலம் அவருக்கு பசி ஏற்படுவதை உணரும் தம்பதி, உடனே குழாய் மூலம் பிரத்யேகமாக உள்ள உணவை கொடுக்கின்றனர். அவர்களில் ஒருவர் மகனின் அருகில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். தூக்கித்தான் செல்ல வேண்டும். சிறுநீர் கழித்து விட்டால் கூட சிறுவனுக்கு தெரியாது. இப்படி மகனை காப்பாற்ற போராடும் தம்பதியினரின் செயல் காண்போரின் கண்களை குளமாக்கி விடுகிறது. எனவே அரசு இந்த சிறுவனுக்கு விரைந்து உதவி செய்து தேவையான சிகிச்சைகளை இலவசமாக கிடைத்திட வழி செய்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.


Next Story