'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்ட செயல்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயல்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்ட செயல்பாடு குறித்து அனைத்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை'

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை" திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் அரசு வழிகாட்டுதலின்படி மாவட்ட அளவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்

இந்த கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் பெறுவதற்கான கால அட்டவணையை நிர்ணயித்தல், இந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட அளவிலான குழு, வட்ட அளவிலான குழு அமைத்தல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்திலும் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காகவும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் கட்டுப்பாட்டு அறை அமைப்பது, அதற்கான பொறுப்பு அலுவலர் விண்ணப்பம் வழங்கும் அலுவலர் மண்டல அலுவலர் கண்காணிப்பு அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களை நியமிப்பது,

பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு முகாம் ஏற்பாடு செய்வது, முகாம் நடைபெறும் நேரம் நாட்களை நிர்ணயிப்பது, விண்ணப்பங்களை உடனடியாக பதிவு செய்வதில் விண்ணப்பதாரர்களுக்கு உதவி செய்வது, நகர்ப்புறங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் ஆட்சியர் செ.ஆ. ரிஷப், பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் உள்பட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story