விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Sept 2023 11:12 PM IST (Updated: 27 Sept 2023 11:13 PM IST)
t-max-icont-min-icon

வாகன கடன் சம்பந்தமான வழக்கில் விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்

வாகனக்கடன்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, இரவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 50). விவசாயியான இவர், கடந்த 2020-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளையில் ரூ.53 ஆயிரம் வாகனக்கடன் வாங்கியுள்ளார். இதனை மாதந்தோறும் ரூ.2,800 என்ற வகையில் 24 மாதங்கள் செலுத்த வேண்டும்.

இதற்கான தொகையை தனது வங்கி கணக்கில் இருந்து வங்கி தானாகவே குறித்த நேரத்தில் எடுத்துக்கொள்ள ரத்தினசாமி அனுமதி வழங்கியிருந்தார். இருந்தும் வங்கி சார்பில் ரத்தினசாமியின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளாமல், தவணையை நேரடியாக பணமாக வாங்கிச்சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்தினசாமிக்கு வங்கியில் இருந்து அறிவிப்பு ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், அவர் மொத்தமாக 31 தவணைகள் செலுத்த வேண்டும் என்றும், பாக்கி தொகையாக ரூ.19 ஆயிரத்து 838 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட அறிவிப்பில் ரூ.20 ஆயிரத்து 708 செலுத்த வேண்டும் என கூறியிருந்தனர். இதைக்கண்டு ரத்தினசாமி அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுபற்றி கடந்த மே மாதம் அரியலூர் நுகர்வோர் நீதிமன்றத்திலும் ரத்தினசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்த அரியலூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் நேற்று தீர்ப்பு வழங்கினர். அந்த தீர்ப்பில், வங்கி தரப்பில் 30 நாட்களுக்குள் ரத்தினசாமிக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்றும், வர்த்தக சட்டவிரோத நடைமுறையை கடைபிடித்ததற்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story