காதல் கணவருடன் சென்ற கல்லூரி மாணவி


காதல் கணவருடன் சென்ற கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தையில், கல்லூரி மாணவி தனது காதல் கணவருடன் செல்வதாக கூறி சென்றார். இதனால் மாணவியின் பெற்றோரின் பாசப்போராட்டம் வீணானது

கடலூர்

கடலூர்

காதல் திருமணம்

பண்ருட்டியை சேர்ந்த 25 வயது கார் டிரைவரும், திருவதிகையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இதில் கார் டிரைவர் இந்து மதத்தை சேர்ந்தவராவார். மாணவி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில் மகளை காணவில்லை என்று மாணவியின் தந்தை பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இருவரையும் போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அந்த மாணவி தன்னுடைய காதல் கணவருடன் செல்வதாக கூறியதாக தெரிகிறது. இதற்கு மாணவியின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தை

இதை கண்டித்து மாணவியின் உறவினர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் 2 பேரையும் மீண்டும் அழைத்து விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்படி நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு ராஜாராம் முன்னிலையில் காதல் தம்பதியினர் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவியிடம் அவரது பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் காதல் கணவருடன் செல்வதாக கல்லூரி மாணவி தெரிவித்தார். அதன்பேரில் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் பெற்றோரின் பாசப்போராட்டம் வீணானது.


Next Story