காரில் வந்த கும்பல் தாக்கியதால் கல்லூரி மாணவர் தற்கொலை


காரில் வந்த கும்பல் தாக்கியதால் கல்லூரி மாணவர் தற்கொலை
x

கொடைக்கானல் அருகே மோதிய மோட்டார் சைக்கிளை தர மறுத்ததோடு, காரில் வந்த கும்பல் தாக்கியதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவமானம் தாங்காமல் உயிரை விட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

கல்லூரி மாணவர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். அவருடைய மனைவி அங்காளஈஸ்வரி. இந்த தம்பதியின் மகன் விஜேஸ் பாண்டியன் (வயது 17). இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கொடைக்கானலில் வசிக்கிற விஜேஸ் பாண்டியனின் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். இதனால் துக்கம் விசாரிப்பதற்காக, தனது நண்பர்களுடன் விஜேஸ் பாண்டியன் மோட்டார் சைக்கிளில் கடந்த 19-ந்தேதி சென்றார்.

பின்னர் கொடைக்கானலில் இருந்து பெருமாள்மலைக்கு மோட்டார் சைக்கிளில் விஜேஸ்பாண்டியன் திரும்பி கொண்டிருந்தார். பெருமாள்மலை அருகே மலைப்பாதையில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பியது.

சொகுசு கார் மீது மோதல்

அப்போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் விஜேஸ்பாண்டியன் மற்றும் அவருடைய நண்பர்கள் கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் சொகுசு கார் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சொகுசு காரில் இருந்தவர்கள், விஜேஸ்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களை திட்டியதோடு சரமாரியாக தாக்கினர். எட்டி உதைத்ததாகவும் தெரிகிறது.

மேலும் சொகுசு காரை சரி செய்து கொடுத்து விட்டு, மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லுமாறு கூறி அதனை பறித்து கொண்டனர். விஜேஸ்பாண்டியன், அவரது நண்பர்கள் கெஞ்சி கேட்டும் மோட்டார் சைக்கிளை அவர்கள் கொடுக்கவில்லை.

அடித்ததால் அவமானம்

இந்த சம்பவம் குறித்து தனது சகோதரர் விஷ்ணு பாண்டியனிடம், விஜேஸ்பாண்டியன் கூறினார். அவரும் அங்கு சென்று சொகுசு காரில் இருந்தவர்களிடம் மோட்டார் சைக்கிளை கேட்டார். ஆனால் அவர்கள், விஷ்ணு பாண்டியனையும் திட்டி தாக்கியதாக தெரிகிறது.

இதேபோல் அங்காளஈஸ்வரியும் அங்கு சென்று கேட்டுள்ளார். அவரது பேச்சுக்கும், சொகுசு காரில் இருந்தவர்கள் செவி சாய்க்கவில்லை. இதனால் விஜேஸ்பாண்டியன் செய்வதறியாது திகைத்தார்.

மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து கொண்டதாலும், தன்னையும், தனது நண்பர்கள், சகோதரர் ஆகியோரை தாக்கியதாலும் விஜேஸ்பாண்டியன் அவமானம் அடைந்தார். இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். வீட்டில் உள்ளவர்களிடம் இந்த சம்பவம் குறித்து புலம்பினார்.

தாயிடம் செல்போனில் பேச்சு

இந்தநிலையில் அங்காளஈஸ்வரி, நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்று விட்டார். அவரது சகோதரனும் வெளியே சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த விஜேஸ்பாண்டியன், தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவமானம் தாங்க முடியாததால் தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். மேலும் தனது உடலை, பெருமாள்மலை சுடுகாட்டில் எரித்து விடுமாறும் கூறினார்.

தனது மகன் கூறுவதை கேட்டு அங்காளஈஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று கூறியதோடு, அவரை ஆறுதல்படுத்தினார். சிறிதுநேரத்தில், செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் வேலை முடிந்து மாலையில் அங்காளஈஸ்வரி வீடு திரும்பினார். அப்போது, வீட்டுக்குள் விஜேஸ்பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக்கண்டு அங்காளஈஸ்வரி கதறி அழுதார். தன்னை தாக்கியதால், அவமானம் அடைந்த விஜேஸ்பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் விஜேஸ்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து விஜேஸ்பாண்டியனின் சகோதரர், விஷ்ணு பாண்டியன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா். அதன்பேரில் விஜேஸ்பாண்டியனை தற்கொலைக்கு தூண்டியதாக கொடைக்கானலை சேர்ந்த மெக்கானிக் வினோத் (36), பெருமாள்மலையை சேர்ந்த தங்கராஜ் (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே மோட்டார் சைக்கிள், சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவமானத்தால் மனம் உடைந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருமாள்மலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story