மிக்ஜம் புயல் மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை
மத்திய குழு சென்று நாளை மாலையில் இருந்து புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகளை தொடங்க உள்ளது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கடந்த 7-ந் தேதி சென்னைக்கு வந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் 2-வது தவணைத்தொகையான ரூ.450 கோடியை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில், "கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் மிக்ஜம் புயல் ஏற்படுத்திய சேதங்களையும், அதில் தமிழக அரசு மேற்கொண்ட நிவாரணப்பணிகள் பற்றியும் நேரடியாக சென்று அறிந்து மதிப்பிடுவதற்காக மத்திய குழுவை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புயல் சேதம் குறித்த இறுதி அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பித்ததும் தமிழ்நாட்டிற்கு அதே மத்திய குழு சென்று, பாதிப்பு குறித்த விரிவான மதிப்பீட்டை தயாரிக்கும்.
பின்னர் மத்திய அரசு வழங்க வேண்டிய உதவித்தொகை குறித்த இறுதி பரிந்துரைகளை மத்திய குழு அளிக்கும். அதோடு, மிக்ஜம் புயல் மிகக் கடுமையானதாக கருதப்பட வேண்டுமா? என்பது குறித்தும் மத்திய குழு பரிந்துரைக்கும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி இந்த குழுவுக்கு தலைமை வகிப்பார். மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
எனவே மத்திய குழுவின் தலைவரின் கீழ் செயல்படுவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்கள் தரப்பில் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். அவர்களின் பெயர், தொடர்பு எண், முகவரி போன்றவற்றை மத்திய உள்துறைக்கு 9-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள தீவிரத்தை உணர்ந்து அங்கு மத்திய குழு சென்று நாளை (திங்கட்கிழமை) மாலையில் இருந்து புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகளை தொடங்க உள்ளது. மதிப்பிடும் பணிகளை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பின்னர் ஒரு வாரத்திற்குள் இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.