மர்மநபர் செல்போன் பறித்தபோது ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் - ரெயிலை தவறவிட்டு கதறி அழுதவருக்கு பொதுமக்கள் உதவி


மர்மநபர் செல்போன் பறித்தபோது ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் - ரெயிலை தவறவிட்டு கதறி அழுதவருக்கு பொதுமக்கள் உதவி
x

கொருக்குப்பேட்டையில் மர்மநபர் செல்போன் பறித்த போது ஓடும் ரெயிலில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், ரெயிலை தவறி விட்டு கதறி அழுதார். அவருக்கு பொதுமக்கள் உதவி செய்தனர்.

சென்னை

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக்குமார் (வயது 24). இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவர், பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழை சரிபார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்து விட்டு சென்னை சென்டிரல் ெரயில் நிலையத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் விஜயவாடா புறப்பட்டு சென்றார்.

கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் அருகே ரெயில் மெதுவாக சென்றது. விவேக்குமார், ரெயில் பெட்டியின் வாசல் கதவு ஓரத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.

அப்போது ரெயில் தண்டவாளம் அருகே நின்றிருந்த மர்மநபர், பெரிய கம்பால் தாக்கி விவேக்குமாரிடம் இருந்து செல்போனை பறித்தார். இதில் நிலைதடுமாறிய விவேக்குமார், ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அவர், சுதாரித்து எழுவதற்குள் ரெயில் வேகமாக சென்றுவிட்டது. செல்போன் பறித்த மர்மநபரை விரட்டிச்சென்றபோது, அவர் செல்போனை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரெயிலில் தான் அவரது உடைமைகள், சான்றிதழ்கள் இருந்தது.

செல்போனை பறிகொடுத்ததுடன், சான்றிதழ், உடைமைகளுடன் ரெயிலையும் தவறவிட்டதால் தண்டவாளத்தில் அமர்ந்து விவேக்குமார் கதறி அழுதார். அப்போது அங்கு வந்த பொதுமக்களின் கால்களில் விழுந்து தனக்கு உதவும்படி கெஞ்சினார்.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். மேலும் பொதுமக்கள், விவேக்குமாரின் செல்போன் எண்ணை வாங்கி அதில் தொடர்பு கொண்டபோது, மர்மநபர் வீசி சென்ற அவரது செல்போன், அங்கிருந்து சுமார் 10 மீட்டர் இடைவெளி தூரத்தில் தண்டவாளம் ஓரத்தில் கிடப்பது தெரிந்தது. செல்போனை மீட்டு அவரிடம் கொடுத்தனர்.

இதற்கிடையில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் ெரயில்வே போலீசார், ரெயிலில் இருந்த விவேக்குமாரின் உடைமைகளை எடுத்து வைத்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விவேக்குமார், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஓங்கோல் சென்று தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு விஜயவாடாவுக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story