ஆபாச படங்களை பதிவிட்டவர் மீது வழக்கு


ஆபாச படங்களை பதிவிட்டவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Jun 2023 12:30 AM IST (Updated: 25 Jun 2023 4:49 PM IST)
t-max-icont-min-icon

ஆபாச படங்களை பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

தென்காசி

சங்கரன்கோவில்:

மனைவி பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி ஆபாச படங்களை பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கணவன்-மனைவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் வாசுதேவன். இவருக்கும், சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

ஆபாச படங்கள்

இந்த நிலையில் வாசுதேவன் தனது மனைவி பெயரில் முகநூலில் போலியாக கணக்கு தொடங்கினார். அதில் மனைவியை ஆபாசமாக சித்தரித்து படங்களையும், தவறான தகவல்களையும் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது மனைவியின் தங்கை பெயரிலும் போலியாக கணக்கு தொடங்கி ஆபாச படங்களை சித்தரித்து பதிவிட்டதாக தெரிகிறது. மேலும் தனது மாமனாரிடம் உங்களது மகள்கள் முகநூல் பக்கத்தில் ஆபாசமாக கருத்துகளை பதிவிடுவதாகவும், இதை பல்வேறு டி.வி.க்களுக்கு அனுப்பிவிடுவேன் என்றும் கூறி மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அந்த பெண்களின் தந்தை சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், வாசுதேவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசுக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story