நிலத்தகராறில் ரவுடியை அனுப்பி தாக்கியதில் கார் மெக்கானிக் பார்வை பறிபோனது
செங்குன்றம்,
சென்னை பேசின்பிரிட்ஜ் தங்கசாலை பகுதியை சேர்ந்தவர் தீபேஷ்(வயது 27). இவர், செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி பகுதியில் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 4-ந்தேதி குடிபோதையில் வந்த 2 பேர் தீபேசை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு கண் பார்வை பறிபோனதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து ரவுடி சந்திரன்(28) என்பவரை கைது செய்தார். விசாரணையில், தீபேசுக்கும், அவருடைய உறவினரான சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வரும் ஜெயக்குமார்(52) என்பவருக்கும் தண்டல் கழனியில் உள்ள ஒரு நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் தீபேஷை தீர்த்துகட்ட ஜெயக்குமாரும் அவரது நண்பரான வக்கீல் ஜமீத் ரபி என்பவரும் சேர்ந்து ரவுடி சந்திரன் உள்பட 2 பேரை அனுப்பி தீபேசை தாக்கச்சொன்னதாக தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வக்கீல் ஜமித் ரபி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.