மின்கம்பத்தில் மோதிய கார்
கோபால்பட்டி அருகே மின்கம்பத்தில் கார் மோதியது.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மணிசேகர் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர் தனது குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு சென்று விட்டு ஊருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை மணிசேகர் ஓட்டினார். நத்தம்-திண்டுக்கல் சாலையில் கோபால்பட்டியை அடுத்த கணவாய்பட்டி சிவன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிசேகர், காரை நிறுத்த முயன்றார். இருப்பினும் அவரால் முடியவில்லை. ஒரு கட்டத்தில், சாலையோர உயர்அழுத்த மின்கம்பத்தின் மீது கார் மோதி நின்றது. இதில் மின்கம்பம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மின்சார வயர்கள் அறுந்து காரின் மீது விழுந்தது. அப்போது வயர்கள், ஒன்றோடு ஒன்று உரசியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து காரில் இருந்த மணிசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் காரை விட்டு இறங்கி காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தகவலின்பேரில் மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்தனர். சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பத்தை அகற்றி, மின்வயர்களை சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.