ஈரோட்டில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்கப்படும்; பெருந்துறையில் அண்ணாமலை பேச்சு
ஈரோட்டில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று பெருந்துறையில் அண்ணாமலை கூறினார்.
பெருந்துறை, அக்.26-
ஈரோட்டில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று பெருந்துறையில் அண்ணாமலை கூறினார்.
நடைபயணம்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணம் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு 8.30 மணி அளவில் பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தனது நடைபயணத்தை அவர் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து தாரை- தப்பட்டை முழங்க அவரை கட்சியினர் பின் தொடர்ந்து சென்றனர்.
இந்த நடைபயணம் குன்னத்தூர் ரோடு, நால்ரோடு சந்திப்பு, பழைய பஸ் நிலையம் சந்திப்பு, அரசு ஆஸ்பத்திரி சந்திப்பு, போலீஸ் நிலைய சந்திப்பு வழியாக பங்களா வீதியை சென்றடைந்தது. 2 கிலோ மீட்டர் தூர நடைபயணத்துக்கு பிறகு, பங்களா வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாயக்கழிவு பிரச்சினை
பெருந்துறையில் மிகப்பெரிய பாதிப்பே சிப்காட்டில் உள்ள சாயக்கழிவு பிரச்சினை தான். அந்த கழிவுகள் காரணமாக இந்தியாவில் அதிக புற்றுநோய் உள்ள மாவட்டமாக ஈரோடு உள்ளது. இந்த நிலைக்கு காரணம், தமிழ்நாடு அரசு முறையாக கவனம் செலுத்தாததுதான். சிப்காட் மூலமாக மாதந்தோறும் ரூ.3 கோடி தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அந்த பணத்தை இதுவரை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆண்டுக்கு ரூ.36 கோடி வருமானம் இருந்தும் சாயக்கழிவு பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பெருந்துறை பகுதி உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்தால் மத்தியில் அமைய உள்ள பா.ஜனதா அரசு நிச்சயமாக ஈரோட்டுக்கு புற்றுநோய் ஆஸ்பத்திரியை கொண்டு வரும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
பெருந்துறை தொகுதிக்குட்பட்ட குன்னத்தூரில் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதையும் பா.ஜனதா அரசு நிறைவேற்றும்.
புதிய மேம்பாலங்கள்
பெருந்துறை பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக விபத்து ஏற்பட்டு ஆண்டுக்கு சுமார் 17 பேர் இறந்துவிடுவதாகவும், உயிர் பலியை தடுக்க பாலம் அமைக்க வேண்டும் என்றும் என்னிடம் கோரிக்கை மனு கொடுத்தார்கள். அந்த மனுவை நான் மத்திய மந்திரி நிதின்கட்கரியிடம் சமர்ப்பித்தேன். செப்டம்பர் மாதத்திலேயே பெருந்துறை பகுதியில் ரூ.93 கோடி செலவில் 2 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த செயலை செய்வதற்கு மாநிலத்தில் ஆட்சியிலும் இல்லை. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் இல்லை. இருந்தாலும், மக்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக முயற்சி எடுத்து திட்டத்தை கொண்டு வந்து உள்ளோம். இதையே நீங்கள் எங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளித்தால் இதுபோன்ற பல திட்டங்களை உங்களுக்கு செய்து கொடுக்க காத்திருக்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
வரவேற்பு
முன்னதாக, பெருந்துறை குன்னத்தூர் ரோட்டுக்கு வந்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு கட்சியின் ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவர் இமயம் சந்திரசேகர், முன்னாள் செயலாளர் டி.என்.ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாஸ்தா சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராயல் கே.சரவணன், துணைத்தலைவர் மணிமேகலை, செயலாளர் கோபால், பெருந்துறை நகர தலைவர் எஸ்.பூர்ண சந்திரன், பொதுச்செயலாளர் கார்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் கே.டி.எஸ்.கவின், செயலாளர் கவுரி சங்கர், ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் முருகானந்தம், மகளிர் அணி துணைத்தலைவர் சுகன்யா, பெருந்துறை நகர இளைஞரணி தலைவர் கமல், பொதுச்செயலாளர் விக்னேஷ் உள்பட பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.