மயிலாடுதுறை: பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவன் மீது கார் மோதி பலி..!
திருக்கடையூரில் சிறுவன் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோட்டை சேர்ந்த பழனி மகன் தினேஷ் வயது (8). இவர் தீபாவளி அன்று வீட்டின் அருகில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆக்கூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனைப் பார்த்த சிறுவனின் தாய், தந்தை அவரை மீட்டு அருகில் உள்ள திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் நடராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தீபாவளி அன்று சிறுவன் உயிரிழப்பு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.