பயணிகள் நிழற்குடை கட்ட தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் சாவு


பயணிகள் நிழற்குடை கட்ட தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் சாவு
x

மங்கலம்பேட்டை அருகே பயணிகள் நிழற்குடை கட்ட தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புதுவெண்ணெய்க்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. விவசாயி. இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களது மகன் வினோத்குமார் (வயது 11).

விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு வரை படித்த இவன் தற்போது பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தான்.

இந்த நிலையில், உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வரை 22.85 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 37 இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில், விஜயமாநகரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தது. தற்போது பெய்த மழையின் காரணமாக, இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

தவறி விழுந்த சிறுவன்

நேற்று மாலை, சிறுவன் வினோத்குமார், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக அவன், அங்கிருந்த ஒரு பள்ளத்துக்குள் தவறி விழுந்துவிட்டான்.

இதில் தண்ணீரில் மூழ்கிய அவன், வெளியே வர முயன்றும் முடியவில்லை. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவனை மீட்டனர். ஆனால், அதற்குள் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதுபற்றி அறிந்தவுடன், அவனது பெற்றோர் அங்கு பதறியடித்து ஓடிவந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையில் மங்கலம்பேட்டை போலீசார் விரைந்து வந்து, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும், பணியை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டதே, சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story