மக்களின் பன்முகத்தன்மையை எடுத்துக் கூறக்கூடியது புத்தகம்-கனிமொழி எம்.பி. பேச்சு


மக்களின் பன்முகத்தன்மையை எடுத்துக் கூறக்கூடியது புத்தகம்-கனிமொழி எம்.பி. பேச்சு
x

“மக்களின் பன்முகத்தன்மையை எடுத்துக்கூறக்கூடியது புத்தகம்” என்று பாளையங்கோட்டையில் நடந்த புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி. கூறினார்.

திருநெல்வேலி

"மக்களின் பன்முகத்தன்மையை எடுத்துக்கூறக்கூடியது புத்தகம்" என்று புத்தகத்திருவிழாவில் கனிமொழி எம்.பி. கூறினார்.

புத்தக திருவிழா

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று மாலை நடந்த கருத்தரங்கிற்கு பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை பார்வையிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் தோறும் புத்தகத்திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளார். நாட்டில் குறைந்து வருகின்ற பன்முகத்தன்மையை மக்களிடையே எடுத்து கூறுவதற்காகவும், உணர்த்துவதற்காகவும் தான் இந்த புத்தகத் திருவிழா நடக்கிறது. மக்களிடையே பன்முகத்தன்மையை எடுத்துக்கூறுவது இலக்கியமும், புத்தகமும் தான்.

வாழ்வியல் முறைகள்

புத்தகம், இலக்கியம் தான் நமது வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறுகிறது. வாழ்வியல் முறைகளை தெரிந்தால் தான் நம்மால் இலக்கியம் படைக்க முடியும். ஜெயகாந்தனின் எழுத்து சென்னையில் வெளியே தெரியாமல் இருந்த மக்களை பற்றிய கருத்துக்களை கூறியது. கரிசல் மண் வாழ்வியலை பற்றி கீ.ரா. எழுதினார். இந்த மண்ணைப் பற்றியும், இந்த மண்ணின் பெருமைகளை பற்றியும் பலர் எழுதியுள்ளனர். இதை படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். பெண்களைப் படிக்க வைப்பதற்காக கருணாநிதி 10-ம் வகுப்பு வரை படிக்கின்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை கொடுத்தார். இதனால் பெண் கல்வியறிவு கூடியது.

மதத்தைப் பற்றி கேள்வி கேட்கக்கூடாது என்று இருந்த காலத்தில் அதைப் பற்றி கேள்வி கேட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் தான் சிந்தனையாளர்கள்.

மீனவ மக்களின் வாழ்க்கை பற்றி யாரும் அதிகம் எழுதியதில்லை. ஆனால் பேரழிவு காலங்களில் அவர்கள் தான் மற்ற மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். புத்தகம் பல்வேறு தகவல்களை நாட்டிற்கும், உலகிற்கும் எடுத்துக்கூறுகிறது.

இலக்கிய விழா

நான் கேரளாவில் நடந்த ஒரு கோவில் விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு கோவில் விழா என்றால் இலக்கிய விழாவும் சேர்ந்து நடைபெறும். அங்கு சாதி, மதம் கிடையாது. விழாக்களை அனைவரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள். இலக்கியம், கலை, மனிதநேயம் என்று வரும்போது அனைவரும் ஒன்றுபட்டு விடுகிறார்கள்.

நமது கண்ணில் படாதவைகளை பற்றியும், நமது கண்ணில் பட்டவைகளைப் பற்றியும், நமக்கு தெரிந்தவைகளை பற்றியும் மக்கள் தெரிகின்ற வண்ணம் எழுதுகிறவனே எழுத்தாளன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு இது போன்ற புத்தகத் திருவிழா பயனுள்ளதாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர்

விழாவில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., ஞானதிரவியம் எம்.பி., துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கவிஞர் மூர்த்தி, முன்னாள் எம்.பி.விஜிலா சத்யானந்த், எழுத்தாளர் நாறும்பூநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, ரேவதி பிரபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம் நன்றி கூறினார்.


Next Story