புத்தக வாசிப்பு பழக்கம் நல்ல வழிகாட்டியாக இருக்கும்
புத்தக வாசிப்பு பழக்கம் நல்ல வழிகாட்டியாக இருக்கும்
மன்னார்குடியில் நடந்த புத்தக திருவிழாவில் புத்தக வாசிப்பு பழக்கம் நல்ல வழிகாட்டியாக இருக்கும் என காமராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
புத்தக திருவிழா
மன்னார்குடியில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் நேற்று அரங்க நிகழ்வு நடைபெற்றது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ஞானசம்பந்தம் தலைமையிலான குழுவினர் வழங்கிய இலக்கியங்கள் இன்புற்று வாழவா? இன்புற்று மகிழவா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க துணை ஆளுநர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ பேசியதாவது:-
உலகத்தில் முதல் முறையாக புத்தக கண்காட்சி ஜெர்மனியில் நடைபெற்றது. அதன் பிறகுதான் பரவலாக புத்தக கண்காட்சிகள் நடக்க தொடங்கின. இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் நூலகம் அமைக்கப்பட்ட ஊர் மன்னார்குடி. இதனை பொறியாளர் கனகசபைப்பிள்ளை நடத்தினார். அவர்தான் மன்னார்குடி சந்தை பேட்டையில் 1931-ம் ஆண்டு புத்தகத்திருவிழாவை நடத்தினார்.
நல்ல வழிகாட்டியாக இருக்கும்
புத்தகத்திருவிழாவை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ரோட்டரி சங்கமும் இணைந்து தற்போது நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இந்த பகுதி மக்கள் தொடர்ந்து படிக்க வேண்டும், தங்களை தகுதி உள்ளவர்களாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இந்த புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. புத்தக வாசிப்பு பழக்கம் நல்ல வழிகாட்டியாக இருக்கும். புத்தகங்களை தொட்டுப் பார்த்தால் காகிதம் தான், தொடர்ந்து படித்தால் மனிதனை செதுக்குகிற ஆயுதமாக விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவா. ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன். வாசுகிராமன், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.