பவானி அருகே வாயில் கறுப்பு துணி கட்டி பாரதீய ஜனதா கட்சியினர் மவுன போராட்டம்; அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக்கோரி நடந்தது


பவானி அருகே வாயில் கறுப்பு துணி கட்டி   பாரதீய ஜனதா கட்சியினர் மவுன போராட்டம்;  அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக்கோரி நடந்தது
x

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக்கோரி பவானி அருகே வாயில் கறுப்பு துணி கட்டி பாரதீய ஜனதா கட்சியினர் மவுன போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு

பவானி

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக்கோரி பவானி அருகே வாயில் கறுப்பு துணி கட்டி பாரதீய ஜனதா கட்சியினர் மவுன போராட்டம் நடத்தினார்கள்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் 1,857 கோடி மதிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது 96.5 சதவீத பணிகள் நடந்து முடிந்துவிட்டன.

இந்தநிலையில் பவானி காலிங்கராயன் பாளையம் மற்றும் சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளி ஆகிய இடங்களில் சுமார் 2.2 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கவில்லை. இதனால் பணி முடிவடையாத நிலை உள்ளது.

மவுன போராட்டம்

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்து பார்வையிடுகிறார். இதில் கிரே நகர் அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் முடிக்கப்பட்ட இடத்தை இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார்.

பணிகள் முடிவடையாத இடத்தை விட்டு முடிந்த இடத்தை மட்டும் முதல்-அமைச்சர் பார்வையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக்கோரியும் ஈரோடு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மவுன போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

வாயில் கறுப்பு துணி

இதைத்தொடர்ந்து நேற்று பவானி அருகே அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் நடைபெறாமல் உள்ள இடத்தில் பா.ஜ.க.வினர் திரண்டார்கள். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வாயில் கறுப்பு துணி (மாஸ்க்) கட்டிக்கொண்டு மவுன போராட்டம் நடத்தினார்கள். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டி.தங்கராஜ், மாநில துணைச் செயலாளர் லோகேஷ், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி, தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. டாக்டர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு மாதத்துக்குள் திட்டத்தை முடித்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர்கள் பன்னீர்செல்வம், ரகுராம், மாநில செயற்குழு தலைவர் பழனிச்சாமி, பொதுச் செயலாளர் வேதாந்த சிவகாமி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி பொதுச் செயலாளர் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாதுரை, செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.


Related Tags :
Next Story