கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா... ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம் - வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து


கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா... ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம் - வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து
x

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் ‘ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் ‘ஆன்லைன்’ விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள்.

'ஆன்லைன்' விளையாட்டுகளில் திறமைக்கு சவால்விடும் வகையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், அதில் 'ரம்மி' போன்ற சூதாட்டம் புகுந்து, விளையாடுகிறவர்களின் மனங்களை மசியம் செய்து மயக்குவதுடன், பண ஆசைகாட்டி இழுக்கிறது.

இந்த விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுத்தாலும், 'எப்படியும் ஒருமுறை வெற்றி பெற்றுவிடலாம். இழந்த பணத்தை மீட்டுவிடலாம்' என்ற நம்பிக்கை வெறியோடு பலர் பணத்தை இழந்து வருகிறார்கள்.

சேமித்த பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள்.

தடையைத் தகர்த்தனர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த விளையாட்டுகளை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி தடையை தகர்த்துவிட்டன.

கொரோனா காலகட்டத்தில் இந்த விளையாட்டுகள் கொடிக்கட்டிப் பறந்தன. வேலையிழப்பு அதிகரித்ததால் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் பதிவிறக்கம் அசுர வேகத்தில் நடைபெற்றன.

அதே வேகத்தில் சூதாடிப் பணத்தை இழந்தவர்கள் நிம்மதியை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் விளைவால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற குரல் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஓங்கி ஒலித்தது.

நிரந்தர தடை சட்டம் எப்போது?

அந்த குரலுக்கு செவி சாய்த்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை அவசியம் என்று அறிக்கை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் நிறைவேற்றுவது என்று தீர்மானித்தது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி அதற்கான அவசரச் சட்டத்தை நிறைவேற்றி தமிழக கவர்னரின் ஒப்புதலுடன், அரசிதழிலும் வெளியிட்டது.

அந்த அவசரச் சட்டத்தை நிரந்தரம் ஆக்குவதற்கான சட்ட மசோதா கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடியும்.

ஆனால் இந்த மசோதாவுக்கு இன்னமும் கவர்னரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

கவர்னர் விரைவில் முடிவு

கவர்னர் தரப்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 3 கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழக சட்டத்துறையும் உடனடியாக அந்த கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்து இருக்கிறது.

தமிழக அரசு அளித்துள்ள விளக்கங்களை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துவிட்டு கவர்னர் விரைவில் ஒரு முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுபற்றி சட்ட வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும், ஆன்லைன் சூதட்ட பாதிப்புகள் குறித்து உணர்ந்தவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

வக்கீல்கள் கருத்து

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன்:-


ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தமட்டில் வயது வரம்பில்லாமல் ஆண், பெண், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் விளையாடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தங்களது பெற்றோரின் வங்கி கணக்கை பயன்படுத்தி இந்த விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இது லாட்டரி சீட்டுகளைவிட பல மடங்கு கொடுமையானது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தில் முடிவெடுப்பதில் கவர்னர் எந்தவித தாமதமும் செய்யக்கூடாது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கவர்னர் தாமதம் செய்ததால் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் என்பது பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய விவகாரம் என்பதால் கவர்னர் விரைந்து முடிவு எடுப்பது தான் மக்களுக்கு செய்யும் நன்மை ஆகும்.

வக்கீல் அரிகரன்:-



ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த ஆட்சியில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு தற்காலிகத் தடை அமலில் இருந்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தி வரும் நிறுவனங்கள் இந்த தடை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று வாதாடி தடையில் இருந்து தப்பித்தது. முந்தைய கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்தும் பயன் இல்லாமல் போனது.

எனவே இந்த முறை தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்ட மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால்கூட தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதில் தமிழக கவர்னர் கவனம் செலுத்துகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. எனவே அந்த அடிப்படையில்தான் அவர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். இதை நாம் தடங்கலாக கருதக்கூடாது. இதனை நிரந்தர தீர்வுக்கான ஒரு காலதாமதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிகம் பணம் இழப்பு

எழும்பூரை சேர்ந்த நித்யானந்தம்:-



ஆன்லைன் விளையாட்டுகள் திறமைக்கு சவால் விடுகின்றன. உழைப்புக்கு இடைவெளியில் மனத்துக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சூதாட்டம் ஆக்கிரமித்தவுடன் ஆன்லைன் விளையாட்டுகள் உயிரை பறிக்கும் விளையாட்டுகள் போன்று மாறியது உள்ளபடியே வேதனைக்குரியதாக இருக்கிறது.

சினிமா பிரபலங்கள் சிலர் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டு தூதர்களாக இருப்பதும் கவலைக்குரியது. ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கொரட்டூரை சேர்ந்த மோகன்:-



ஆன்லைன் விளையாட்டுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி விளையாடி அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் அதிகம் பணத்தையும் இழந்தேன். ஒருமுறை தோற்றால் மீண்டும் விளையாடக்கூடாது என்ற எண்ணம் எழும். ஆனால் அந்த நேரத்தில் நிறுவனங்கள் சலுகையை அறிவித்து ஆசையை மீண்டும் தூண்டிவிடும்.

ஆன்லைன் சூதாட்டம் வேண்டாம் என்று யார் அறிவுரை கூறினாலும் மனம் ஏற்க மறுக்கிறது. தற்போது அரசாங்கமே தடை செய்ய முடிவெடுத்திருப்பதால் மனதை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறேன்.

ஆழ்வார் திருநகரை சேர்ந்த இல்லத்தரசி தீபா:-



இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் பணம் வந்து குவிய வேண்டும். உழைக்காமல் உயர்ந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களின் இந்த எண்ண ஓட்டத்தை சாதகமாக பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. ஆன்லைன் சூதாட்ட செயலியை பதவிறக்கம் செய்துவிட்டால் அதில் இருந்து மீள முடியாதவாறு பல சூழ்ச்சிகளையும் சூசகங்களையும் நிறுவனங்கள் கையாள்கின்றன.

பணம், சந்தோஷம், நிம்மதியை பறிக்கும் உயிரை குடிக்கும் சூதாட்டம் நமக்கு தேவையா? எனவே, சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் அவசியமும், அத்தியாவசியமும் ஆகும். இந்த நிரந்தர சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்.

அடிமையானவர் மனநிலை

நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஷாலினி:-


கஷ்டப்பட்டு உழைத்து சேமிக்கும் பணமே கரைந்து போய்விடுகிறது. இதில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்து சேமித்த பணத்தையும் பலர் இழந்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு செலவிடும் பணத்தை காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்குவது போன்ற பயன் உள்ள விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை உணர வேண்டும்.

தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்துக்கட்ட தமிழக அரசு தீவிரம் காட்டுவது பாராட்டுக்குரியது. தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கும் செயலாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு உடனடியாக தடை போடுவதில் தடங்கல் ஏற்படக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பவர்கள், அரசாங்கம் தடை போட்டாலும், விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் மேல் முறையீடு செய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதையும் காண முடிகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்த போலீஸ்காரர்



கோவை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றியவர் காளிமுத்து (வயது 29). இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக, அவர் கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி சிறைச்சாலை மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த பொருட்காட்சியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்துவுக்கு தில்லை நாயகி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். காளிமுத்துவை காதலித்து திருமணம் செய்து கொண்ட தில்லை நாயகி கணவரின் இழப்பை தாங்க முடியாத சோகத்தில் இன்னும் தவிக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் குறித்து அவர் கூறும்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் என் கணவர் பணத்தை இழந்தது அவர் இறந்த பிறகு தான் எனக்கு தெரியவந்தது. தற்போது, எனது காதல் கணவரை இழந்து தவிக்கிறேன். என்னை போன்று யாரும் பாதிக்கப்படக்கூடாது. என்று சோகத்துடன் தில்லை நாயகி கூறினார்.


Next Story