ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது


ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது
x

களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது.

கோவிலில் எண்ணெய் குடித்த கரடி

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலி, கரடி, மிளா, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

இந்த நிலையில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறிய கரடி, களக்காடு அருகே பெருமாள்குளம் பொத்தை பகுதியில் சுற்றித்திரிந்தது. அங்குள்ள கோவிலுக்குள் புகுந்த கரடி, எண்ணெய் குடித்து சென்ற காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

இதையடுத்து ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் கரடியை பிடிப்பதற்காக, பெருமாள்குளத்தில் ஆய்வு செய்த வனத்துறையினர், அங்குள்ள இசக்கியம்மன் கோவில் முன்பாக கூண்டு வைத்து கண்காணித்தனர்.

கூண்டில் சிக்கியது

இதற்கிடையே பெருமாள்குளத்தில் உள்ள களக்காடு யூனியன் துணைத்தலைவர் விசுவாசம் தோட்டத்தில் கரடி நடமாட்டம் காணப்பட்டது. இதையடுத்து இசக்கியம்மன் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த கூண்டினை வனத்துறையினர் எடுத்து சென்று, விசுவாசம் தோட்டத்தில் வைத்து கண்காணித்தனர். அந்த கூண்டுக்குள் அன்னாசி உள்ளிட்ட பழங்களை வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவில் தோட்டத்தில் கூண்டில் இருந்த பழங்களை உண்ண வந்த கரடி கூண்டுக்குள் சிக்கிக்கொண்டது. இதையடுத்து வனச்சரகர் பிரபாகர் உள்ளிட்ட வனத்துறையினர் கரடியை பார்வையிட்டனர். அது 6 வயதான பெண் கரடி ஆகும். அதற்கு கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளித்து, செங்கல்தேரி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

இதேபோல் அப்பகுதியில் சுற்றித்திரியும் மேலும் 2 கரடிகளையும் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story