கடற்கரையை சுத்தப்படுத்தும் ரோபோ, காடுகளை வளர்க்கும் டிரோன்; ஐ.ஐ.டி. மாணவர்களின் கண்டுபிடிப்புகள்


கடற்கரையை சுத்தப்படுத்தும் ரோபோ, காடுகளை வளர்க்கும் டிரோன்; ஐ.ஐ.டி. மாணவர்களின் கண்டுபிடிப்புகள்
x

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கடற்கரையை சுத்தப்படுத்தும் தானியங்கி ரோபோ, காடுகளை வளர்க்கும் டிரோன் ஆகியவற்றை கண்டுபிடித்து தயாரித்து அசத்தியிருக்கின்றனர்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சமூகத்துக்கு சாதகமாக்கும் வகையில் புத்தாக்க மையம் செயல்பட்டுவருகிறது.

இந்த மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டில் 77 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை 800 மாணவ-மாணவிகள் கொண்ட குழுவினர் காட்சிப்படுத்தி இருந்தனர்.

இந்த ஆண்டின் புதிய கண்டுபிடிப்புகளாக, மின்சக்தியில் இயங்கும் பார்முலா பந்தய கார், முற்றிலும் சூரியசக்தியில் இயங்கும் மின்சார வாகனம், கடற்கரையின் இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையில் அதன் மேற்பரப்பில் குப்பைகளை முற்றிலும் அகற்றும் தானியங்கி ரோபோ, செல்லமுடியாத இடங்களில் காடுகளை வளர்க்கும் டிரோன், 3டி பிரிண்டர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த இசை வடிவ செயலி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

காட்சிப்படுத்த திட்டம்

இதுதவிர, ஹைப்பர்லூப், வானியல், தானியங்கி வாகனங்கள், கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை சுத்தம் செய்யும் கருவி உள்பட இதர கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து அவற்றை வடிவமைத்த மாணவ-மாணவிகள் குழுவினர் விவரித்துக் கூறினர். அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும், அதனால் என்ன மாதிரியான பயன் கிடைக்கும் என்பனவற்றை விளக்கிச் சொன்னார்கள்.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஐ.டி. மாணவர்களே புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். இனிவரும் ஆண்டுகளில் மற்ற கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் ஐ.ஐ.டி.யில் காட்சிப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை சுத்தம் செய்யும் கருவி ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பறக்கும் கார்

அதேபோல், ஆள் இல்லாத காரையும் மாணவர்கள் தயாரித்துள்ளனர். தற்போது அதை ஐ.ஐ.டி. வளாகத்தில் பயன்படுத்த இருக்கிறோம். இதை சாலையில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதற்கென சாலை போக்குவரத்தில் மேம்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது.

பறக்கும் கார் தயாரிக்கும் பணியிலும் மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் சூரிய மின்சக்தியால் 3 ஆயிரம் கி.மீ. தூரம் பயணிக்கும் அதிவேக காரை கண்டுபிடித்து தயாரித்துள்ளனர். அது பார்முலா பந்தயத்திலும் பங்கேற்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story