எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் 50 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது


எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் 50 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது
x

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் 50 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

சென்னை

சென்னையை சேர்ந்தவர் ராதிகா (வயது 50). இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளாகியும் குழந்தையில்லை . இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் செயற்கை கருத்தரித்தல் முறையில் கருதரித்து, 7 மாதம் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவர் மேல சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த ராதிகாவிற்கு பிரசவத்தில் ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.

இதே போல் வள்ளி (47) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை . வள்ளியும் தனியார் ஆஸ்பத்திரியில் செயற்கை கருத்தரித்தல் முறையில் கருதரித்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு 29 வாரத்திலேயே அறுவை சிகிச்சையின் மூலம் குறைபிரசவத்தில் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது:-

எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தொடர்ந்து சிறப்பாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் முதல் முறையாக 50 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது சாதனைக்குரியது. ராதிகா மற்றும் வள்ளி ஆகிய இருவரும் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

இருவருக்கும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில் இருவரின் குழந்தைகளுக்கும் ரத்தஓட்டம் சீராக இல்லை என தெரிந்தவுடன் நுரையீரல் மற்றும் மூளைவளர்ச்சிக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது. இதில் வள்ளிக்கு 29 வாரங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 900 கிராம் எடையுள்ள குழந்தை பிறந்தது.

குழந்தையின் எடை 900 கிராம் என்பதால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பிறகு தற்போது குழந்தையின் எடை 1.4 கிலோவாக அதிகரித்து, தாயுடன் நலமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story