உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை சாவு
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிாிழந்தது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே பூவானூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் அய்யனார் (வயது 3). இந்நிலையில் கிருஷ்ணவேணி தனது மகன் அய்யனாருடன் வடமாம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் நிலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி தனது குழந்தை அய்யனாரை தூங்க வைத்து விட்டு நிலத்தில் வேலை பார்க்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, தொட்டிலில் குழந்தையை காணவில்லை. பின்னர் அருகில் தேடி பார்த்தபோது, அருகில் உள்ள கிணற்றில் அய்யனார் பிணமாக மிதந்தான். இதைபார்த்த கிருஷ்ணவேணி கதறி அழுதார். தூக்கத்தில் இருந்த எழுந்த குழந்தை தொட்டிலில் இருந்து இறங்கி அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.