நாமக்கல் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவன் கைது
ஜேடர்பாளையம் அருகே பெண்ணை மானபங்கப்படுத்தி கொலை செய்த 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்,
ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன்.விவசாயி. இவரது மனைவி நித்யா (27). இவர்களுக்கு தனுஸ்ரீ (7), சுபஸ்ரீ (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நித்யா கடந்த சனிக்கிழமை மதியம் ஆடுகளை மேய்ப்பதற்காக வழக்கமாக செல்லும் கரைப்பாளையம் பகுதியில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்று ஆடுகளை மேய்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் மாலை ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளது.ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்த நிலையில் மனைவி வராததால் சந்தேகமடைந்த கணவர் விவேகானந்தன் மனைவியை தேடி ஆடுகள் மேய்க்க சென்ற கரைப்பாளையம் ஓடை பகுதிக்கு சென்று மனைவியை தேடியுள்ளார்.அப்போது அங்கு உடலை சுமார் 500 அடி தூரத்திற்கு சேற்றில் இழுத்து செல்லப்பட்ட தாரையை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது அங்கு அவரது மனைவி நித்யாவின் உடல் மேலாடைகள் கிழிந்து இறந்த நிலையில் அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் மனைவியின் உடல் அருகே சென்று பார்த்தபோது கழுத்து, கண்ணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் இருந்துள்ளது. மேலும் இடது பக்க காதில் இருந்த தங்க கம்மல் காதில் இருந்து பிய்த்து எடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.இது குறித்து விவேகானந்தன் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் நித்யாவின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நித்யாவின் உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத போலீசார் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் உறவினர்களிடம் தெரிவிக்காமல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உறவினர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும், நித்யாவின் மர்ம சாவில் தொடர்புடைய மர்ம நபர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுத்து திடீரென நாமக்கல் -மோகனூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, சுரேஷ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெண்னை கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நித்யாவை கொலை செய்த 17 வயது சிறுவனை கைது செய்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.