12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
அன்னவாசல் மாதாகோவில் தெருவில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவிற்கு பின்புறம் ஆலங்குளம் உள்ளது. இந்த குளத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று இருந்து கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது வெளியில் வந்து அப்பகுதியில் உள்ள கோழிகளை பிடித்து செல்வதும் சில நேரங்களில் குளத்து கரையில் இருந்துகொண்டு அப்பகுதியில் செல்பவர்களை பயமுறுத்துவதும் தொடர்ந்து நடந்து வந்தது. இதனை கண்டு அச்சம் அடைந்த அப்பகுதியினர் இந்த மலைப்பாம்பை பிடிக்க பலமுறை முயற்சி எடுத்தும் அது பயன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அந்த மலைப்பாம்பு குளத்துகரையில் இருப்பதாக அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அன்னவாசல் பேரூராட்சி பணியாளர்கள் 12 அடிநீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து நார்த்தாமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனக்காவலர் மலைப்பாம்பை மீட்டு நார்த்தாமலை காப்புகட்டில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.