தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலி பறிப்பு


தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலி பறிப்பு
x

தியாகதுருகத்தில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

முகமூடி கொள்ளையர்கள்

தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கப்பன்(வயது 62). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி செல்வி(58), மகன் குமார், மருமகள் பிரபாவதி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்களில் செல்வி வீ்ட்டு வராண்டாவிலும், ரங்கப்பன் தனி அறையிலும், இவரது மகன், மருமகள் ஆகியோர் இன்னொரு அறையிலும் படுத்து உறங்கினர்.

அப்போது முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

வீ்ட்டுக்குள் புகுந்தனர்

இந்த நிலையில் நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக செல்வி வீ்ட்டின் உள்ளே கழிவறைக்கு சென்றார். அப்போது வீட்டின் வெளியே நின்ற 2 மர்ம நபர்களும் இரும்பு கம்பியால் வீட்டு கதவின் தாழ்பாழை உடைத்துவிட்டு உள்ளே சென்று பதுங்கி இருந்தனர்.

பின்னர் கழிவறையில் இருந்து திரும்பி வந்த செல்வி மீண்டும் வராண்டாவில் படுத்து உறங்கினார். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த 2 மர்ம நபர்களும் திடீரென செல்வின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அவர் தாலி சங்கிலியை கைகளால் இறுக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். அப்போது மர்மநபர்கள் செல்வியை காலால் உதைத்து தள்ளி விட்டு அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டு அது சம்பவம் நடந்த வீட்டை சுற்றி வந்து பின்னர் வீட்டின் பின்புறமாக ஓடி சென்று தியாகதுருகம் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் தகவல் அறிந்து வந்த கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களும் வீட்டின் கதவில் இருந்த ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தியாகதுருகம் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

தியாகதுருகத்தில் நள்ளிரவில் முகமூடிகொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story