பொம்மையில் இருந்த பேட்டரியை விழுங்கிய 1 வயது பெண் குழந்தை
பொம்மையில் இருந்த பேட்டரியை விழுங்கிய 1 வயது பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சையின்றி பேட்டரியை டாக்டர்கள் அகற்றினர்.
பேட்டரியை விழுங்கிய குழந்தை
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த வாரம் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த அந்த குழந்தை, பொம்மையில் இருந்த சிறிய 1 ரூபாய் நாணய வடிவில் இருந்த பேட்டரியை விழுங்கியது.
இதையறிந்த அவருடைய பெற்றோர் குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் உணவு குழாயில் பேட்டரி சிக்கி இருப்பது தெரியவந்தது.
ஓட்டை விழும் ஆபத்து
அது மின் சக்தி கொண்ட பேட்டரி என்பதால் குடல் பகுதிக்கு சென்றால், அது ஏற்படுத்தும் அரிப்பு காரணமாக குடலில் ஓட்டை விழும் ஆபத்து இருந்தது. இதனால் அந்த பேட்டரியை உடனே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு குழந்தையை பரிசோதனை செய்த இரைப்பை மற்றும் குடல் இயல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் எண்டோஸ்கோப்பி மூலம் பேட்டரியை அகற்ற முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சையின்றி அகற்றம்
இதற்காக குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, வாய்வழியாக குழாயை விட்டு, பேட்டரியை அகற்றினர். தற்போது தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த குழந்தை நலமாக உள்ளது. நாணய வடிவில் இருந்த பேட்டரியை அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோபி மூலம் பாதுகாப்பாக அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினரை டீன் நேரு, கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.
பொதுவாக குழந்தைகளுக்கு பேட்டரி போன்ற எலக்ட்ரிக் சார்ந்த சாதனங்கள் உள்ளடக்கிய பொம்மைகளை வாங்கி கொடுப்பதை பெற்றோர் தவிர்ப்பது மிகவும் நல்லது என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.