சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9,930 கனஅடி நீர் வெளியேற்றம்
சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9,930 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9,930 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 116.60 அடி உயரத்திற்கு அதாவது, 6,788 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.72 சதவீதமாகும்.
நீர்வரத்து ஒரே நாளில் 4 மடங்கு உயர்வு
சாத்தனூர் அணை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் இடது மற்றும் வலதுபுற கால்வாயிலும் நீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கி கல்வராயன் மலைத்தொடர் பகுதியிலும் கிருஷ்ணகிரி அணையின் உபரிநீரும் சேர்ந்து சாத்தனூர் அணைக்கு வரும் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி வினாடிக்கு 3,760 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இது ஒரே நாளில் நான்கு மடங்காக உயர்ந்து தற்போது வினாடிக்கு 12,345 கன அடி நீராக வந்து கொண்டிருக்கிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 9,930 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 450 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.
4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. எனவே சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக கடலூரை சென்றடையும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வாழும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றில் இறங்கவோ, போனில் 'செல்பி' எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறும் போது அணையிலும் அணையை ஒட்டி உள்ள கரையோர பகுதிகளில் இருக்கும் முதலைகள் அடித்து வரப்பட்டு ஆற்று நீரில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.