பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மகிழ்ச்சி


பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மகிழ்ச்சி
x

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றும் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தாம்பரம்,

சென்னை குரோம் பேட்டையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு நடத்திய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போடப்பட்ட துரோக ஒப்பந்தத்தினால் 7 ஆண்டுகள் தொழிலாளர்கள் ஊதிய இழப்பை சந்தித்து வந்தார்கள். அந்த ஊதிய இழப்பை சரிகட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, அனைவருக்கும் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்ட அந்த அநீதி நீக்கப்பட்டு நியாயம் கிடைத்துள்ளது. 1.9.2019 முதல் அதனை சரிசெய்ததற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

பிக்சட் பேட்டாவுக்கு சம்மதம்

அதற்கு அடுத்தபடியாக 5 சதவீத ஊதிய உயர்வு 1.9.19 முதல் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும்போது ஊதிய இழப்பு, சர்வீஸ் குறைப்பு உள்ளிட்ட தண்டனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவை அனைத்தையும் சரிசெய்து, அவர்களுக்கு சீனியாரிட்டி கொடுத்து பதவி உயர்வு வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். மகளிர் பஸ்களில் பணிபுரியும் டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கு பிக்சட் பேட்டாவை நாள் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தி தருவதாக கூறியிருக்கிறார்கள். பல்வேறு போக்குவரத்து கழகங்களில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த தண்டனைகளுக்கு சீரான முடிவை காண பொதுவான நிலை ஆணை கேட்டிருந்தோம். அதனை நிறைவேற்றி தர ஒரு குழு அமைத்து, அதற்கான அரசாணையும் பிறப்பித்திருக்கிறார்கள்.

தொழிலாளர்களின் எண்ணிக்கையை மீண்டும் 7.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு குழு அமைத்து விரைவில் செய்து தருவதாக கூறியிருக்கிறார்கள். தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் 1.4.13-க்கு பிறகு வேலைக்கு வந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடையாது, புதிய ஓய்வூதியம் தான் என்று சொன்னதை மாற்றி அமைக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவை விரைந்து முடித்து, அதற்குரிய பரிகாரங்களை செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

99 சதவீத முன்னேற்றம்

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்ற நடைமுறையை மாற்றக்கூடாது என்று கேட்டிருக்கிறோம். ஓய்வுபெற்றுள்ள தொழிலாளர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் பஞ்சப்படி வழங்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏறக்குறைய 99 சதவீதம் முன்னேற்றத்தை கண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story