குரூப்-4 தேர்வை 96,207 பேர் எழுதினர்


குரூப்-4 தேர்வை 96,207 பேர் எழுதினர்
x

சேலம் மாவட்டத்தில் 96 ஆயிரத்து 207 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர். தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் 96 ஆயிரத்து 207 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர். தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குரூப்-4 தேர்வு

குரூப்- 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று சேலம் மாவட்டம் முழுவதும் நடந்தது. சேலம் சாரதா பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 885 பேர் குரூப்-4 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 291 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடந்தது. தேர்வை 96 ஆயிரத்து 207 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 18 ஆயிரத்து 678 பேர் தேர்வு எழுத வரவில்லை. 394 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், 24 பறக்கும் படை, 96 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளுக்கு ஏற்ப தேர்வுகள் நடத்தப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு எழுத அனுமதிக்கவில்லை

தேர்வு எழுத வருபவர்கள் 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் வரவேண்டும். காலதாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுதிக்கப்படமாட்டார்கள் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த அனைத்து மையங்களிலும் காலை 9 மணிக்குள் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 9 மணி ஆனதும் தேர்வு மையங்களின் நுழைவு வாசல்கள் பூட்டப்பட்டன. அதன்பிறகு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்திற்கு காலதாமதமாக வந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் அதிகாரிகளிடம் தேர்வு எழுத அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

எடப்பாடி

அதே போன்று எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்திற்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தனர். அவர்களும் தேர்வு மையத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி மேனகாவிடம் தேர்வு எழுத அனுமதிக்கும்படி கூறினர். அதற்கு அவர் விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானது. எனவே காலதாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்றார்.

இதையடுத்து தேர்வு எழுத வந்தவர்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தேர்வு மையத்தில் இருந்து வெளியேறினர். ஒரு சில மையங்களில் கண்பார்வை தெரியாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் தேர்வு எழுத உதவி புரிந்தனர்.

தாரமங்கலம்- ஆத்தூர்

தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத தாமதமாக வந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது. இதனால் அவர்கள் ஓமலூர் சாலையில் திரண்டு சாலைமறியலுக்கு முயன்றனர். சம்பவ இடத்துக்கு வந்த தாசில்தார் வள்ளமுனியப்பன், கிராம நிர்வாக அதிகாரி சுசீலா மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படி இருந்தும் அவர்கள் சமரசம் அடையவில்லை. பின்னர் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆத்தூர் பகுதியில் 6 இடங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது. தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சேலம்- ஆத்தூர் சாலையில் சாலைமறியலுக்கு முயன்றனர். தகவல் அறிந்த ஆத்தூர் போலிசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோன்று மாவட்டத்தில் மேலும் ஒரு சில மையங்களுக்கு காலதாமதமாக தேர்வு எழுத வந்தவர்களை கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story