வடநெம்மேலி முதலை பண்ணையில் இரவில் முதலைகளை காண ரூ.900 கட்டணம்...!
வடநெம்மேலி முதலை பண்ணையில் இரவில் முதலைகளை காண ரூ. 900 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை,
ஆசியாவிலேயே பெரிய முதலை பண்ணை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கும் சென்னைக்கும் மத்திய பகுதியில் வடநெம்மேலியில் அமைந்துள்ள முதலை பண்ணையாகும். இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நன்னீர் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர் முதலைகள், உப்பு நீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் இந்த பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன.
அதேபோல் முதலைகள் மட்டுமில்லாமல் லட்சக்கணக்கில் விலை மதிப்புள்ள அல்டாப்ரா வகை ஆமைகள், நட்சத்திர ஆமைகள், பச்சோந்திகள், கொமோடா டிராகன் போன்றவையும் இங்குள்ள தொட்டிகளில் வைத்து பராமரிக்கப்படுகிறது.
இந்த முதலை பண்ணையை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த நிலையில், வடநெம்மேலி முதலை பண்ணையில் இரவு 9 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பகலில் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இரவில் முதலைகளை பார்க்க ரூ.900 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பார்வையாளர்கள் டார்ச்லைட் மூலம் முதலைகளை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.