விவசாயியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி


விவசாயியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Jun 2023 7:26 PM GMT (Updated: 23 Jun 2023 9:20 AM GMT)

விவசாயியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்

தஞ்சாவூர்

இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி விவசாயியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆன்லைனில் முதலீடு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவை சேர்ந்த 35 வயது விவசாயியிக்கு மே மாதம் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, வங்கிக் கணக்கு எண்ணையும் அனுப்பினார்.

இதை நம்பிய விவசாயி மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினார். ஆனால், மர்ம நபரிடமிருந்து எந்தவித லாபத்தொகையும் வரவில்லை. இதனால், வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபரை விவசாயி தொடர்பு கொண்டார். அப்போது, மேலும் பணம் செலுத்தினால், முன்பு செலுத்திய தொகைக்கும் சேர்த்து லாபத்தொகை அனுப்புவதாக மர்ம நபர் கூறினார்.

ரூ.9¼ லட்சம் மோசடி

இதனை உண்மை என நம்பிய விவசாயி கடந்த மே மாதம் 22-ந் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.9¼ லட்சம் வரை மர்ம நபருக்கு பணம் அனுப்பினார். அதன் பிறகும் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி, தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.


Next Story