திருச்சி அருகே அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி அருகே அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி அருகே அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழியாக கடத்தல்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கடத்தல்களை தடுக்க கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஸ் மூலமாக...
இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இலங்கையில் இருந்து படகு மூலமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு தங்கம் கடத்தி வரப்பட்டு பின்னர் அரசு பஸ்சில் சென்னைக்கு தம்பதி உள்பட 3 பேர் கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது.
இந்தநிலையில் தம்பதி உள்பட 3 பேர் பயணம் செய்த பஸ் திருச்சி அருகே கல்பாளையம் கிராமத்தில் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்த பஸ்சை வழிமறித்து திடீர் சோதனை நடத்தினர்.
தம்பதி உள்பட 3 பேர் கைது
பஸ்சில் சந்தேகப்படும் வகையில் இருந்த தம்பதி உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் கொண்டுவந்த பையை சோதனை நடத்தியதில் 9 கிலோ 765 கிராம் தங்க கட்டிகள் இருந்தது. மேலும் 6 லட்சம் ரொக்க பணமும் இருந்தன. இதையடுத்து அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய ரூபாயின் மதிப்பு 5 கோடியே 89 லட்சத்து 66 ஆயிரம் ஆகும். மேலும் தம்பதி உள்பட 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.