சென்னையில் பசுமை தாயகம் சார்பில் 9-ந்தேதி மாரத்தான் ஓட்டம்


சென்னையில் பசுமை தாயகம் சார்பில் 9-ந்தேதி மாரத்தான் ஓட்டம்
x

சென்னையில் பசுமை தாயகம் சார்பில் 9-ந்தேதி மாரத்தான் ஓட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்; தமிழ்நாடு சட்டப்பேரவையும், அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளும், பொது அமைப்புகளும், பெரு நிறுவனங்களும் காலநிலை மாற்ற அவசர நிலையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல் திட்டத்தை ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான சென்னை ஓட்டம் என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஓட்டத்திற்கு நான் தலைமையேற்க இருக்கிறேன்.

தமிழ்நாட்டை காக்க வேண்டும்; இந்தியாவை காக்க வேண்டும்; உலகை காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் பூவுலகை காக்க விரும்பும் சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story