காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது
திருவண்ணாமலை அருகே காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அருகே காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை வன சரகத்திற்கு உட்பட்ட பாலியப்பட்டு கிராமம்் காப்புக்காட்டில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலையும், கஞ்சா அடித்து விட்டு போதையில் கறி வாங்கி சென்று கறியை சமைத்து சாப்பிடும் கும்பலையும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெரிய பாலியப்பட்டு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, பச்சையப்பன், ரஞ்சித், மோகன்ராஜ், வெற்றி, அரிகிருஷ்ணன், மூலக்காடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தட்சணாமூர்த்தி, சுதாகர் ஆகியோர் என்பது தெரியவந்தது. 9 பேரையும் வனத்துறையினர் கைது செய்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
அவர்களிடம் 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, நெற்றியில் பொருத்தும் பேட்டரி டார்ச் லைட், வெடி மருந்து, முயல், உடும்பு, வேட்டை யாட பயன்படுத்தும் வலைகள், கம்பி வலைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.