89-வது ஆண்டு நிறுவனா் நாள் விழா: அண்ணாமலை பல்கலைக்கழகம் பலதுறை வித்தகர்களை உருவாக்கியுள்ளது துணைவேந்தர் கதிரேசன் பெருமிதம்
அண்ணாமலை பல்கலைக்கழகம் பலதுறை வித்தகர்களை உருவாக்கியுள்ளது என்று 89-வது ஆண்டு நிறுவனர் நாள் விழாவில் துணை வேந்தர் கதிரேசன் கூறினார்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் 143-வது பிறந்த நாள் மற்றும் 89-வது ஆண்டு நிறுவனர் நாள் விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இதற்கு துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கி பேசும்போது, 1929-ம் ஆண்டில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ரூ.20 லட்சம் மற்றும் 200 ஏக்கர் நிலம் அளித்து சிதம்பரம் அண்ணாமலை நகரில் பல்கலைக்கழகத்தை தொடங்கினார். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களாக இருந்த கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர். அண்ணாமலை செட்டியாரால் விதைக்கப்பட்ட விதை இன்று உலகெங்கிலும் பல நாடுகளில் நமது முன்னாள் மாணவர்கள் பெரும் பதவியில் உள்ளனர். பல துறை வித்தகர்களை உருவாக்கியுள்ளது இப்பல்கலைக்கழகம் என்றார்.
டாக்டர் எஸ்.எம்.பாலாஜி
விழாவில் சென்னை பாலாஜி பல் மருத்துவம், கிரேனியோபேசியல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மேலாண் இயக்குனர் எஸ்.எம்.பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிறுவனர் நாள் விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி பல் மருத்துவம் படித்தேன். அண்ணாமலை பல்கலைக்கழகம் இல்லை என்றால் நமக்கெல்லாம் பெருமை கிடையாது. அண்ணாமலை செட்டியார் தமிழை வளர்த்து, தமிழ் கலாசாரம் பரவ செய்தவர். தமிழ்நாட்டில் பல் மருத்துவத்துறை தொடங்கிய முதல் தனியார் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தான். இந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களும் பயிலும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.
முன்னாள் மாணவர்கள் கவுரவிப்பு
முன்னதாக டாக்டர் எஸ்.எம்.பாலாஜி எழுதிய வாய், தாடை அறுவை சிகிச்சை முறைகள் குறித்த 4-வது பாகம் புத்தகத்தை துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் வெளியிட்டார். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் 33 ஆண்டுகள் பணிநிறைவு செய்த பல்கலைக்கழக ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக கலை மன்ற மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் பொறியியல் புல முதல்வர் கார்த்திகேயன் மற்றும் புல முதல்வர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நுண்கலை புல முதல்வர் அருட்செல்வி வரவேற்றார். முடிவில் பதிவாளர்(பொறுப்பு) சிங்காரவேல் நன்றி கூறினார்.