ஒரே மாதத்தில் 87 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 87 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையும் மீறி நடைபெறும் சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவோரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அவர்கள் ஓராண்டுக்கு தொடர்ந்து சிறையில் இருக்கும் வகையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்த மாதத்தில் (மே) இதுவரை 87 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாநகரில் 55 பேர் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவுப்படியும், நெல்லை புறநகர் மாவட்டத்தில் 32 பேர் கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படியும் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.