தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விரைவு பஸ்களில் பயணிக்க 82 ஆயிரம் பேர் முன்பதிவு
இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதமே தொடங்கியது.
சென்னை,
நாடு முழுவதும் வருகின்ற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதமே தொடங்கியது.
இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது:-
விரைவு பஸ்களில் வருகிற 9-ம் தேதி பயணிக்க 22 ஆயிரம் பேர், 10-ம் தேதி பயணிக்க 43 ஆயிரம் பேர், 11-ம் தேதி பயணிக்க 17 ஆயிரம் பேர் என மொத்தம் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து 10-ம் தேதி பயணிக்க 28 ஆயிரம் பேரும், பிற இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க 15 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்காக 12-ம் தேதி பிற இடங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் பேரும், 13-ம் தேதி 26 ஆயிரம் பேரும், 14-ம் தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினர்.