உடற்கல்வி ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் 8 பவுன் நகைகள் கொள்ளை


உடற்கல்வி ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் 8 பவுன் நகைகள் கொள்ளை
x

உடற்கல்வி ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் 8 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

உடையார்பாளையம்:

உடற்கல்வி ஆசிரியர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 50). இவர் விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி(44).

ேநற்று முன்தினம் சுரேஷ்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் எழிலரசி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலை நேரத்தில் அவரது வீட்டிற்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்துள்ளார்.

மாவிலை பறித்து தரும்படி...

அவர் எழிலரசியிடம், சுரேஷ்குமாரின் பெயரைக்கூறி, அவர் தனது நண்பர் என்று கூறியுள்ளார். ேமலும் தனது வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெற இருப்பதாகவும், அதற்காக தோரணம் கட்ட மாவிலை தேவைப்படுவதாகவும், எனவே அருகில் மாமரம் இருந்தால் மாவிலை பறித்து தரும்படியும் கேட்டுள்ளார்.

அதை நம்பிய எழிலரசி, எதிர்வீட்டின் அருகே சென்று மாவிலையை பறித்து வந்து, அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அந்த நபர் தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

நகைகள் கொள்ளை

பின்னர் எழிலரசி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 'பிரிட்ஜ்' அருகே வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பீரோவில் இருந்த 4½ பவுன் நெக்லஸ் மற்றும் மூன்று ஜோடி தோடு உள்ளிட்ட சுமார் 8 பவுன் நகைகளை அந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் எழிலரசி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிந்து, நகைகளை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகிறார்.

உடற்கல்வி ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story