கடற்படை வாகனம் மோதி 8 மாத கர்ப்பிணி பலி
சென்னை நேப்பியர் பாலம் அருகே கடற்படை வாகனம் மோதி கடற்படை அதிகாரியின் 8 மாத கர்ப்பிணி பலியானார்.
சென்னை,
சென்னை பல்லவன் சாலையில் உள்ள கடற்படை அதிகாரி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவா ரெட்டி. இவர், கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லலிதா (வயது 22). இவர், 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
சிவா ரெட்டி நேற்று இரவு தனது மனைவியை நடை பயிற்சிக்காக மெரினா கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் நடைபயிற்சி முடித்துவிட்டு, 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
கல்பாக்கத்தில் இருந்து கடற்படை அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு, விசாகப்பட்டினம் நோக்கி கடற்படை வாகனம் சென்றுக்கொண்டிருந்தது. நேப்பியர் பாலம் அருகே சென்றபோது, சிவா ரெட்டியின் மோட்டார் சைக்கிள் மீது அந்த கடற்படை வாகனம் பலமாக மோதியது.
பலி
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த லலிதா படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை, உடனடியாக போலீசார் மீட்டு, அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையும், லலிதாவும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லலிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கடற்படை வாகனத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். அவர்கள் கடற்படை வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.