மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் சாவு
மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் செத்தன.
துவரங்குறிச்சி:
ஆட்டுப்பட்டிக்கு காவல்
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள கொடும்பப்பட்டி ஊராட்சி சின்ன அருளாப்பட்டியை சேர்ந்தவர் கருப்பன்(வயது 57). விவசாயியான இவர் சுமார் 50 ஆடுகள் வளர்த்து வந்தார். மேய்ச்சலுக்கு பின்னர் தினமும் தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு அவர் வீட்டிற்கு செல்வது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி அவருக்கு சொந்தமான 35 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து செத்தன.
இதையடுத்து தினமும் இரவில் கருப்பன் அல்லது அவரது மகன் முருகேஷ்(31) ஆகியோர் ஆட்டுப்பட்டியில் காவலுக்கு இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால், அவர்கள் காவலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
8 ஆடுகள் செத்தன
இதைத்தொடர்ந்து நேற்று அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பட்டியில் இருந்த 12 ஆடுகளில் 8 ஆடுகள் கழுத்து மற்றும் பின்னங்கால் பகுதியில் காயத்துடன் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் ெசத்து கிடந்தன. மேலும் 4 ஆடுகள் படுகாயத்துடன் கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கருப்பன், கால்நடைத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடைத்துறை டாக்டர்கள், காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் அங்கு வந்த வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே மர்ம விலங்கு கடித்து இறந்த 35 ஆடுகளுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் 8 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிரிழந்திருப்பது விவசாயி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோரிக்கை
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மர்ம விலங்குகளின் அட்டகாசத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து மர்ம விலங்குகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.