ரூ.8 கோடியில் புதிய துணை மின் நிலையம்


ரூ.8 கோடியில் புதிய துணை மின் நிலையம்
x

சிவகாசி பகுதியில் ரூ.8 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்தார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதியில் ரூ.8 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மின்வாரியம் சார்பில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறியதாவது:-

சிவகாசி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பேர்நாயக்கன்பட்டி பகுதியில் ரூ.8 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அனுப்பன்குளம் துணை மின்நிலையத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கூடுதலாக ராட்ச டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம்

அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தின் மீனம்பட்டி மின் பாதையில் 24 மணி நேரமும் தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி சிவன் கோவில் அருகில் நான்கு ரத வீதிகளில் புதைவட கேபிள் பதிக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதே போல் செங்கமலநாச்சியார்புரம், தேவர்குளம் பஞ்சாயத்து பகுதி முழுவதும் 24 மணி நேர தடையில்லாத மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாறைப்பட்டி, இ.எஸ்.ஐ. ஆகிய துணை மின்நிலையங்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மின்வாரியம் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அடிக்கடி அசோகன் எம்.எல்.ஏ. மின்வாரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி வருகிறார். தற்போது கூட தொகுதியில் செய்யப்பட உள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அறிக்கை கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story