தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக இயக்கிய11,231 வாகனங்களுக்கு ரூ.79 லட்சம் அபராதம்


தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக இயக்கிய11,231 வாகனங்களுக்கு ரூ.79 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 21 Oct 2023 12:30 AM IST (Updated: 21 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக இயக்கப்பட்ட 11,231 வாகனங்களுக்கு இ-சலான் மூலம் ரூ.79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தர்மபுரி

தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக இயக்கப்பட்ட 11,231 வாகனங்களுக்கு இ-சலான் மூலம் ரூ.79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

வாகன தணிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் தர்மபுரி மாவட்ட போக்குவரத்து துறையின் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தரணீதர், வெங்கிடுசாமி, குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதில் சுமார் 19,500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 5,740 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 513 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

அபராதம்

மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 189 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 60 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 113 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 3,510 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 285 வாகனங்களுக்கும், காப்புச்சான்று, புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 740 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 432 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 222 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின்போது அபராதம் விதிக்கப்பட்டது.

சாலை வரி

இந்த வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.87 லட்சத்து 72 ஆயிரத்து 240 மற்றும் இணக்க கட்டணமாக ரூ.62 லட்சத்து 50 ஆயிரத்து 950 என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 23 ஆயிரத்து 190 உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.92 லட்சத்து ஆயிரத்து 385 நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 9 மாதங்களில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.2 கோடியே 42 லட்சத்து 24 ஆயிரத்து 575 மட்டும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் 11,231 வாகனங்களுக்கு இ-சலான் மூலம் ரூ.79 லட்சத்து 13 ஆயிரத்து 425 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.


Next Story